சென்னை:கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி சந்தேக மரண வழக்கில் இன்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. சென்னை காவல் ஆணையரக 2ஆவது தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "விசாரணை கைதி ராஜசேகர் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தது. குடும்பத்தினரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். அது தொடர்பாக ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில் 4 காயங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். மதியம் 12.30 மணியளவில் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
மாலை 4 மணிக்கு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மொத்தமாக இந்த நிகழ்வு 10 மணி நேரங்களில் நடந்து முடிந்து விட்டது. ராஜசேகர் மீது 27 வழக்குகள் உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளி. சந்தேகத்தின் பேரில் தான் விசாரணை நடந்தது. எதிர்பாராதவிதமாக இறந்து விட்டார்.
மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது. உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின் படி டாக்டர்கள் குழு மூலம் பிரேத பரிசோதனை நடந்துள்ளது. வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜசேகரின் உடலில் 4 காயங்கள் இருந்தது. முதல் காயம் 3இல் இருந்து 5 நாட்கள் முன்பு ஏற்பட்ட காயம், 2ஆவது காயம் 18இல் இருந்து 20 மணி நேரத்திற்கு முன்பு ஏற்பட்ட காயம், 3 ஆவது காயம் 24 மணி நேரத்தில் ஏற்பட்டது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த காயங்களால் அவர் மரணமடையவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணையில் இருக்கும் போது ஒரு காயமும் ஏற்படவில்லை. அவர் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. அதற்கு சாட்சியாகத்தான் பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளது. எதனால் இறந்து போனார் என்பது விஸ்ரா அறிக்கை உள்பட பிற அறிக்கைகள் வந்த பிறகே தெரிய வரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருத்தருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அருகில் மருத்துவமனைக்கு தான் அழைத்து செல்ல முடியும். தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்வது என்பது தவறான நடைமுறை இல்லை. ராஜசேகரை முதலில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது. அவர் நார்மலாக இருக்கிறார் என்று டாக்டர் கூறிய பிறகே போலீஸ் பூத்திற்கு ஓய்வு எடுக்க அழைத்து சென்றனர்.