ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவாரா, இல்லையா? என்ற பல ஆண்டு கேள்விக்கு, நிச்சயமாக கட்சி தொடங்குவேன் என அவரே தெரிவித்துவிட்டார். ஆனால், எப்போது என்ற கேள்விதான் இன்றும் பல்வேறு விவாதங்களை எழுப்பிவருகிறது. கடந்த 2ஆம் தேதி ரஜினியின் புதிய கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என அவரது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு எதையும் ரஜினி வெளியிடவில்லை.
இருப்பினும், அவரது ரசிகர்கள், ’இப்போ இல்லைன்னா எப்போவுமே இல்லை’ போன்ற வாசகங்களுடன் ரஜினியின் அரசியல் வருகையை எதிர்பார்த்து ஆங்காங்கே சுவரொட்டிகளை ஒட்டிவருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் இன்று, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகத்துடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை நடத்தினார். சில மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் கட்சி தொடங்குவது பற்றி அவருடன் பேசப்பட்டதாகவும், நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.