தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தற்போது முத்தையா இயக்கத்தில் ’விருமன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 12) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதற்கான விளம்பர பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி, கேரளாவில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று (ஆக.9) நடைபெற்றது. அப்போது கார்த்தியிடம் ’கைதி இரண்டாம் பாகம்’ எப்போது வரும் என்று கேட்கபட்டதற்கு, 'தற்போது லோகேஷ் கனகராஜ், விஜய் நடிக்கும் தளபதி 67 பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படம் முடிந்தவுடன் அடுத்தாண்டு 'கைதி 2' திரைப்படம் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
கார்த்தியின் இந்த பதிலால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான கைதி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து அப்படத்தின் கதாபாத்திரங்களின் தொடர்ச்சி கமல் நடித்த 'விக்ரம்' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது.
இதனை ஹாலிவுட்டின் மார்வல் பட வரிசையையுடன் ஒப்பிட்டு, 'லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்' (LCU) என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் குறிப்பிட்டு வந்தனர். இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட லோகேஷ் கனகராஜ், 'கைதி', 'விக்ரம்' படங்களின் தொடர்ச்சியாக உருவாகும் திரைப்படங்களின் பெயரோடு 'LCU' என்றும் குறிப்பிடப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:காமன்வெல்த் போட்டியில் தமிழ்ப்பாடலை ஒலிக்க செய்த பிரான்ஸ் தமிழச்சி யார்?