தென்னிந்திய நடிகர் சங்கத்தில், விஷால் தலைமையிலான அணியின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிக்காலம் ஆறு மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழுவை அமைக்கக் கோரி, நடிகர்கள் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்திவைக்க மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார்.
பின்னர் இந்த உத்தரவை எதிர்த்தும், தேர்தலை நடத்த பாதுகாப்பு கோரியும், விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தலை நடத்தலாம் என்றும், வாக்குகளை எண்ணக்கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. பின்னர், தனி அலுவலர் நியமனம் செல்லும் என்றும், தேர்தல் நடத்தப்பட்டது செல்லாது எனவும் தீர்ப்பளித்தது. மூன்று மாதத்தில் புதிதாக தேர்தலை நடத்த உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை தேர்தல் அலுவலராக நியமித்தும் தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்புகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தேர்தல் செல்லாது என அறிவித்து மூன்று மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.