சென்னை:செளகார்பேட்டை பள்ளியப்பன் தொருவில் உள்ள அருணாச்சலேஸ்வரர் மற்றும் வரதராசப் பெருமாள் கோயிலில் இணையம் மூலம் வாடகை செலுத்தும் முறையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "இணைய வழியில் வாடகை செலுத்தும் முறை குறித்து ஆய்வு மேற்கொண்டோம். 1492 வாடகை வசூல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 5,720 திருக்கோயில்களில் இணையம் மூலம் வாடகை வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இயங்கி வரும் கோயில்களில் 11 கோடி ரூபாய் வாடகை இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.
அனுமதி கொடுப்பது இயலாத ஒன்று
எனவே வாடகை நிர்ணயக் குழு மீண்டும் கூடி எளிய மக்கள் பாதிக்காதவாறு நியாயமான வாடகை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும், கோயில்களையும் சொத்துக்களைப் பாதுகாக்கவே அறநிலையத்துறை. தனியாரிடமும் தனி நபர்களிடம் நிர்வகிக்க அனுமதி கொடுப்பது இயலாத ஒன்று.
இந்து சமய அறநிலையத்துறை அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" எனப் பேசினார்.
அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடியது திமுக அரசு அல்ல
மேலும், குறிப்பிட்ட தரப்பினரால் அறநிலையத்துறை மீது கொடுக்கப்படும் எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியக்கூடியது திமுக அரசு அல்ல. கோயில் சொத்துக்களை மீட்கத் தொடங்கியுள்ளோம், செயல்பாடுகள் நேர்மையாக உள்ளதால் எந்த அழுத்தங்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் அரசுக்கு உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமரின் உரை ஒளிரப்பட்டது குறித்து இணை ஆணையரிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கப்படுவதற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே அரசு செயல்படும். ஆன்மிகம் தொடர்பான வகுப்புகள் நடத்த ஏற்கனவே உயர் கல்வித்துறையிடம் மனு அளித்துள்ளோம் அனுமதி கிடைத்ததும் விரைவில் புதிய கல்லூரிகளில் ஆன்மிகம் குறித்த பாடங்கள் நடத்தப்படும்” என்றார்.
இதையும் படிங்க:சர்க்கரையை விட இனிப்பானவள் நம்ம 'கண்மணி': வெளியான நயன் போஸ்டர்!