தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கைகள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு: நடந்தது என்ன? - திருமணத்தை மீறிய உறவு

சென்னையில் திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண்ணை கை, கால்களை கட்டி வைத்து, கத்தியால் வெட்டிக் கொலை செய்து, தீ வைத்து எரித்த கொடூர கொலைகாரனை காவல் துறையினர் கைது செய்தனர்.

பெண்ணை தீயிட்டு கொலை செய்த கொடூரம்
பெண்ணை தீயிட்டு கொலை செய்த கொடூரம்

By

Published : Jun 23, 2021, 1:12 PM IST

சென்னை: நொளம்பூர் சர்வீஸ் சாலை தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அருகேயுள்ள முட்புதரில் நேற்று (ஜூன் 22) அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து, உடனடியாக நொளம்பூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தை சோதனை செய்தனர்.

அப்போது, அங்கு இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் எரிந்து கிடந்தது 'பெண் சடலம்' என்பதை உறுதி செய்தனர். பின்னர், உடனடியாக அந்தப் பெண் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவரிடம் விசாரணை:

மேலும், சடலம் கிடந்த இடத்திற்கு அருகே இருந்த ஒரு கைப்பையை கண்டெடுத்துள்ளனர். அதிலிருந்த ஆதார் கார்டை ஆய்வு செய்ததில், அந்தப் பெண் மதுரவாயல் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த ரேவதி (36) என்பது தெரியவந்தது. மேலும், அவர் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்தவர் என்பதற்கு அடையாளமாக அவரது அடையாள அட்டையும் இருந்தது.

இவற்றை கைப்பற்றிய காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக மதுரவாயல் காவல் நிலையத்தில் ரேவதியின் கணவரான முருகன், தனது மனைவி காணாமல் போனதாகப் புகார் ஒன்றை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, முருகனிடம் ரேவதி குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் நகைகளை ரேவதி, தன் நண்பருக்கு கொடுத்ததாகவும், இதனால் நகை கொண்டு வரும்படி தங்களுக்குள் தகராறு ஏற்பட்டதையும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, ரேவதி பணி புரியக்கூடிய இடத்திற்குச் சென்று விசாரித்த காவல் துறையினர், ரேவதியும், பேட்டரி ஆட்டோ ஓட்டுநரான தெலங்கானாவைச் சேர்ந்த திம்மப்பா (24) ஆகிய இருவரும் கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பணிக்கு வராமல், ஜூன் 21ஆம் தேதி தான் பணிக்கு வந்தது என்றும் தெரியவந்தது.

இதனால், ரேவதியை கணவரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச்சொல்லி அனுப்பி வைத்ததாகவும் பணிபுரியும் இடத்தில் தெரிவித்துள்ளனர்.

வாக்குமூலத்தைக் கேட்டு ஆடிப்போன காவல் துறை:

இதனையடுத்து, பேட்டரி ஆட்டோ ஓட்டுநரான திம்மப்பாவைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

விசாரணையில் திம்மப்பா கூறியதாவது, 'மாநகராட்சியில் ஒன்றாக பணிபுரியும்போது ரேவதியுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் நெருங்கி பழகி, திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்தோம். பணம் தேவைப்பட்டதால் கடந்த ஜூன் 16ஆம் தேதி ரேவதியின் கழுத்திலிருந்த ஐந்து சவரன் நகைகளை வாங்கி, ஆலப்பாக்கத்திலுள்ள அடகு கடையில் 35ஆயிரம் ரூபாய்க்கு அடகுவைத்து ரேவதிக்கு 20ஆயிரம் ரூபாய், எனக்கு 15 ஆயிரம் ரூபாய் எனப் பிரித்துக்கொண்டோம்.

பின்னர், அந்தப் பணத்தினை வைத்து வேலைக்குச் செல்லாமல், நான்கு நாள்களாக ஊர் சுற்றினோம். இந்நிலையில் ரேவதி கழுத்திலிருந்த செயின் எங்கே? என கேட்டு அவரது கணவர் ரேவதியிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால் கடந்த ஜூன் 21ஆம் தேதி மாலை ரேவதி என்னிடம் நகை கேட்பதற்காக மதுரவாயல் மேம்பாலத்திற்கு வந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் நாங்கள் இருவரும் நொளம்பூர் சர்வீஸ் சாலையிலுள்ள முட்புதருக்குச் சென்றோம்.

அப்போது ரேவதி தனது கணவர் நகையை கேட்பதாகக் கூறி என்னிடம் ஐந்து சவரன் நகைகளை மீட்டுதரக்கோரி தகராறில் ஈடுபட்டார். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இதில் நான் ஆத்திரமடைந்து, ரேவதியை அடித்து, அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கை, கால்களை கட்டிவிட்டு, கையிலிருந்த கத்தியால் ரேவதியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தேன். இதனையடுத்து ரேவதியை குப்பை முட்புதரில் போட்டு தீ வைத்து எரித்துவிட்டுச் சென்றேன்” என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனைக் கேட்டு ஆடிப்போன காவல் துறையினர், திம்மப்பா மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, திம்மப்பாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நெல்லையில் பயங்கரம்: ரவுடி வெட்டிக் கொலை

ABOUT THE AUTHOR

...view details