சென்னை: மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "சென்னை மாநகரக் காவல் துறைக்குள்பட்ட 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 2,083 வாக்குப்பதிவு இடங்களும், 11,872 வாக்குச்சாவடி மையங்களும், 792 மொபைல் பார்ட்டிகளும் அமைந்துள்ளன. இதில் 327 பதற்றமான வாக்குப்பதிவு இடங்களில் 1,349 வாக்குச்சாவடி மையங்களும், 10 மிகவும் பதற்றமான வாக்குப்பதிவு இடங்களில் 30 வாக்குச்சாவடி மையங்களும் அமைந்துள்ளன.
வாக்கு எண்ணும் மையங்கள்
லயோலா கல்லூரி, ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை கிறிஸ்துவ கல்லூரி ஆகிய நான்கு இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைந்துள்ளன.
இதுநாள்வரை சென்னை மாநகரம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 371 வழக்குகளும், தேர்தலுக்கு முந்தைய நாள்களில் தடைபெற்ற சம்பவங்கள் குறித்து 18 வழக்குகளும், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியதாக 605 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பணப்பட்டுவாடா புகார்கள்
வாகனத் தணிக்கையின்போது பணம் சுமார் 44.11 கோடி ரூபாயும், தங்கநகைகள் சுமார் 50 கிலோவும், வெள்ளி நகைகள் சுமார் 119 கிலோவும், வைர நகைகள் சுமார் 8.5 சென்டும், 2,889 லிட்டர் மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த புகாரில் ஒன்பது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.