சென்னை செனாய் நகர் பகுதியைச் சேர்ந்த பொன் ப்ரீத்தி ஸ்ரீ என்பவர், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரை ஏழு ஆண்டுகளாக காதலித்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வெற்றிவேல் மற்றும் அவரது குடும்பத்தினர், பொன் ப்ரீத்தி ஸ்ரீயிடம் 200 சவரன் நகை வேண்டும் என்றும், அவரது தாயாரின் பெயரில் உள்ள சொத்தை வெற்றிவேல் பெயருக்கு எழுதி தர வேண்டும் எனக் கேட்டு வற்புறுத்தியுள்ளனர்.
பொன் ப்ரீத்தி ஸ்ரீ பேட்டி இதற்கு பொன் பிரீத்தா ஸ்ரீ மறுப்பு தெரிவித்ததையடுத்து, அவரை அடைத்துவைத்து சித்திரவதை செய்ததோடு, பட்டியலின பெண்ணை திருமணம் செய்துகொண்டு வந்ததாகக் கூறி திட்டியதாகவும், வெற்றிவேல் தனது மனைவியை வேறு நபருடன் தகாத உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இது தொடர்பாக எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளித்தாலும் தனது தந்தை ஒரு வழக்கறிஞர் மற்றும் தனது தாய் அரக்கோணம் நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளதால், பொன் பிரீத்தா ஸ்ரீ மற்றும் அவரது குடும்பத்தினரை கொன்றுவிடுவதாகவும் கூறி வெற்றிவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் புகார் வாங்க மறுக்கப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டதாகவும், இதனை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு இணை ஆணையரிடம் பொன் பிரீத்தா ஸ்ரீ அவரது கணவர் வெற்றிவேல், வெற்றிவேல் குடும்பத்தினர் மீது புகார் மனு அளித்துள்ளார். இந்தப் புகார் மனுவை தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.