பெருந்தொற்றால் முடங்கியிருந்த ஸ்டார்ட்அப் சூழல் தற்போது மெல்ல மீண்டு வருகிறது. புதிதாக பலரும் தொழில் தொடங்க விரும்புகிறார்கள். வெளிநாடுகளில் அதிக வருவாய் பெறும் வேலையை துறந்துவிட்டுகூட, இங்கு வந்து பணியாற்றுகிறார்கள்.
இச்சூழலில், சென்னையின் புதிய தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறதா என தெரிந்துகொள்வதற்காக டை (TiE) எனப்படும் தொழில் முனைவோர் வழிகாட்டு குழுவின் சென்னை பிரிவு செயல் இயக்குநர் அகிலா ராஜேஸ்வரிடம் பேசினோம்.
களத்தில் இறங்கும்முன் ஆய்வு தேவை
அவர் பேசுகையில், "தற்போது தொழில்நுட்பம் சார்ந்தே அதிக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. குறிப்பாக டீப் டெக் எனப்படும் நவீன தொழில்நுட்பங்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன.
பெருந்தொற்று பரவல் காரணமாக மருத்துவ வசதி தொடர்பான நிறுவனங்கள், தொலைதூர கல்வி ஆகியவற்றை குறிவைத்தும் நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. உபசரிப்பு, நுகர்வோர் சேவை சார்ந்த ஸ்டார்ப்அப்களும் அண்மைக் காலத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.
இருப்பினும் இங்கு சில பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நல்ல திட்டத்தை மட்டுமே கையில் வைத்திருக்காமல் அதன் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். இதற்கான ஆதரவு வாடிக்கையாளர்களிடம் உள்ளதா, நீண்ட காலத்துக்கு இதன் பயன்பாடு, குறிப்பிட்ட தயாரிப்பு அல்லது சேவைக்கு பொதுமக்கள் எவ்வவளவு பணம் செலவிடுவார்கள் என்பது போன்ற விவரங்களை ஆராய வேண்டும்.
புதிதாக தொழில் தொடங்குபவர்களின் ஐடியாவை மதிப்பீடு செய்வது, சந்தையில் இதனை லாபகரமான தொழிலாகச் செய்ய முடியுமா என ஆலோசிப்பது, அதன் எதிர்கால விளைவுகள் பற்றி ஆராய்வது போன்ற பணிகள் செய்யப்படுகிறது. தொழில் துறையில் முன்னணி உள்ளவர்கள் தொழில் முனைவோரின் திட்டங்கள் மதிப்பீடு செய்வதோடு அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்குகின்றனர்" என்றார் அகிலா.
வாடிக்கையாளர்கள் அல்லது பயனாளர்களுக்கு நீண்ட காலத்தில் பலனளிக்கும் வகையில், அவர்களின் அன்றாட பிரச்னையைத் தீர்த்து வைக்கும் வகையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்பதே அதனை வார்த்து எடுப்பவர்களின் அறிவுரையாக உள்ளது.
அத்துறையில் உள்ள போட்டியாளர்கள் பற்றியும் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் சிந்திக்க வேண்டும் என்கிறார்கள் மென்டார்கள். பொதுவாக சென்னை, பெங்களூரூ, டெல்லி என்சிஆர் போன்ற நாட்டின் மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் புதிய தொழில் தொடங்கப்படுவது குறைவாகவே உள்ளது என பலரும் விமர்சிப்பதுண்டு.
ஆனால் சென்னையில் தொடங்கப்படும் ஸ்டார்ட்அப்கள் அனைத்துமே லாபகரமாக இயங்கக்கூடியவை எனக் கூறுகிறார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களை கவனித்து வரும் வென்சர் இன்டலிஜன்ஸ் நிறுவனர் அருண் நடராஜன்.