சென்னை:சென்னை மேற்கு மாம்பலத்தைச்சேர்ந்தவர் கார்த்திக் ராஜா(19). கல்லூரி மாணவரான இவர் கடந்த 4ஆம் தேதி வண்டலூர் அருகே விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்க உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க ஆலோசனை வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரை மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை ரேலா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
ரேலா மருத்துவமனையில் நரம்பியல் நிபுணர்கள் மருத்துவ சிகிச்சை அளித்தும் கார்த்திக் ராஜா உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.மேலும் அவரது மூளைசெயலிழந்துவிட்டது. ஆனால் அவரது மற்ற முக்கிய உறுப்புகள் நன்றாக வேலை செய்தன. அதனைத்தொடர்ந்து ரேலா மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் அவரது நிலை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். இந்த நிலையில் பலருக்குப் புதிய வாழ்வு கிடைக்கும் என்பதை மனதில்கொண்டு குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
5 பேருக்கு தானம்:மூளைச்சாவு அடைந்த கார்த்திக் ராஜா உடல் உறுப்புகளை எடுக்க ரேலா மருத்துவமனை தமிழ்நாடு அரசு அலுவலர்களிடம் அனுமதி கோரியது. உடனடியாக அதை மேற்கொள்ள சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அரசு வழங்கியது. இதையடுத்து மாணவர் உடல் உறுப்புகளை எடுத்து சென்னையில் 5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளனர். இதில், இதயம் செயலிழந்த நர்சிங் கல்லூரி மாணவிக்கு அவரது இதயத்தை ரேலா தனியார் மருத்துவமனை பொருத்தியுள்ளது.
இந்தநிலையில் ரேலா மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையமான ‘டிரான்ஸ்டன்’ ஆகியவை இணைந்து அந்த மாணவரின் குடும்பத்தைக் கவுரவித்தன. இது குறித்து கார்த்திக் ராஜாவின் சகோதரி ஜோதி கூறுகையில், ’எனது சகோதரர் இன்று உயிருடன் இல்லை. ஆனால் அவர் 5 வெவ்வேறு உடல்களில் 5 குடும்பங்களுடன் வாழ்கிறார். என் சகோதரனின் உறுப்புகள் இந்த 5 உயிர்களைக் காப்பாற்றியதில் நான் பெருமைப்படுகிறேன்.