பொறியியல் படிப்பிற்கானக் கட்டணங்களை உயர்த்த, அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், பொறியியல் கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் ஊதியம் வழங்குவதற்கு ஏதுவாக தற்போதுள்ள கட்டண விகிதங்களை உயர்த்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிக் கட்டணங்களை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா குழு, பொறியியல் படிப்புகளுக்கு 1 லட்சத்து 44 ஆயிரம் முதல், 1 லட்சத்து 58 ஆயிரம் வரை கட்டணங்களை நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், பெரும்பான்மையான பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் நிர்ணயம் செய்துள்ள ஊதியத்தினை தங்கள் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதற்குக் காரணம் பொறியியல் கட்டணம் குறைவாக உள்ளது என்பது தான் என்று சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் 50 முதல் 55 ஆயிரம் வரையிலும், நிர்வாக இட ஒதுக்கீட்டில் 85 முதல் 90 ஆயிரம் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தக் கட்டணத்தில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் அதிகளவில் சேராமல் உள்ளனர். பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக் கலந்தாய்வில் சுமார் 75 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே உள்ளன.