சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட நாம் அனைவரும் ஆயத்தமாகும் நிலையில், இந்த சுதந்திரத்தை நமக்கு பெற்றுத் தந்த சுதந்திரப் போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் நினைவுகூற வேண்டியது அவசியம். அந்த வகையில், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தவாதியும், விடுதலைப் போராட்ட வீரருமான பெருந்தமிழர் ம.சிங்காரவேலரைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்...
சென்னையில் பிறந்த சிங்காரவேலர், திருவல்லிக்கேணியில் பள்ளிப்படிப்பை முடித்தார். மாநிலக் கல்லூரியில் இளங்களை பட்டப்படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார். 1907ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு பணியாற்றத் தொடங்கினார். அதேவேளையில், காந்தியக் கொள்கையால் கவரப்பட்டு இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்திலும் தன்னை ஐக்கியப் படுத்திக்கொண்டார். அதற்கு முன்னதாகவே சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகக் கொதித்தெழுந்த அவர், அயோத்திதாசப் பண்டிதர் தலைமையில் செயல்பட்டு வந்த பௌத்த சங்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் 1917ஆம் ஆண்டு ரஷ்ய மண்ணில் புரட்சி வெடித்தது. கம்யூனிஸ்ட்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதைப் பத்திரிகைகளிலும் நூல்களின் வாயிலாகவும் அறிந்து கொண்ட சிங்காரவேலர் மனதிலும் புரட்சிகரச் சிந்தனை துளிர்விட்டது. இயல்பிலேயே, பொதுவுடமை, சமத்துவம், சுய மரியாதை ஆகிய கருத்துகளில் நாட்டம் கொண்ட சிங்காரவேலருக்கு, அதை விஞ்ஞான வழியில் வெளிப்படுத்தும் மார்க்சியத் தத்துவத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் இந்தியாவை ஆண்ட ஆங்கிலயேர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற தீவிர உணர்வு அவருக்குள் ஏற்பட்டது.
மேலும், ரஷ்யாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு, இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918இல் தொடங்கினார். சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார். தொழிலாளர் நலனுக்காக 1923ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி, உழப்பாளர் உழவர் கட்சியைத் தொடங்கினார். 1925இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் சிங்காரவேலரும் ஒருவர்.
சிங்காரவேலர் 1918ஆம் ஆண்டு மகாத்மா காந்தியைத் தன் தலைவராக ஏற்றார். இவர் ஆங்கிலேய ஆட்சியின் ரெளலட் சட்டத்தினை எதிர்த்தார். மேலும் 1919ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நீதி கேட்கும் வகையில் உருவெடுத்த ஒத்துழையாமை இயக்கத்தின் போராட்டத்திற்கு அனைத்து வழக்கறிஞர்களுக்கும் காந்தி அழைப்பு விடுத்தார். அப்போது தனது வழக்கறிஞர் ஆடையை எரித்தும் ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.