சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று (அக்டோபர் 10) ஐந்தாவது மெகா கோவிட்-19 தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேரில் ஆய்வுசெய்தார்.
தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், முக்கிய இடங்கள் என மொத்தம் 32 ஆயிரத்து 17 மையங்களில் மெகா கோவிட்-19 தடுப்பூசி பணிகள் நடைபெற்றன.
இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்துப் பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி முதல், இரண்டாம் தவணை அளிக்க திட்டமிடப்பட்டது. இதுவரை நடைபெற்ற நான்கு மெகா முகாம்களில் கோவிட் தடுப்பூசிபோடப்பட்ட விவரம்:
- முதலாவது சுற்று | 12-09-2021 | 28.91 லட்சம் தவணை
- இரண்டாவது சுற்று | 19-09-2021 | 16.43 லட்சம் தவணை
- மூன்றாவது சுற்று | 26-09-2021 | 25.04 லட்சம் தவணை
- நான்காவது சுற்று | 03-10-2021 | 17.04 லட்சம் தவணை
நேற்று (அக்டோபர் 10) நடைபெற்ற ஐந்தாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 22 லட்சத்து 52 ஆயிரத்து 641 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.