திமுக கூட்டணியில் சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் அடங்கிய குழு, இன்று அண்ணா அறிவாலயம் வந்தது. அங்கு திமுக குழுவுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, 50 தொகுதிகள் கேட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தை, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி ஆகியோரிடத்தில் அளித்தனர். ஆனால், 20 தொகுதிகளுக்கு மேல் தர இயலாது என திமுக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் திமுக காங்கிரஸ் இடையே இன்னும் பலகட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிகிறது.
பேச்சுவார்த்தைக்குப்பின், செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "நல்ல முறையில், மகிழ்ச்சிகரமாக பேசினோம். இருதரப்பும் அவரவர் கருத்துகளை தெரிவித்தோம். விரைவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடக்கும்" எனக் கூறினார். மகிழ்ச்சி என அழகிரி வார்த்தைகளில் கூறினாலும், திமுக இம்முறை காட்டும் கறார், அவரது முகத்தில் தெரிந்தது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி மற்றும் மாநிலத் தேர்தல்களில் தோல்வி ஆகியவையே காங்கிரசிற்கு அதிக தொகுதிகள் தர திமுக தயங்குவதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.