சென்னை: டெல்லி பாட்னாவைச்சேர்ந்த ஷாயிஃப் அஷ்ரஃப்(21), ஆதித்யா (21) ஆகிய இருவர், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி, அதே கல்லூரியில் கம்பியூட்டர் சயின்ஸ் 2ஆம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி இருவரும் திருவேற்காட்டைச்சேர்ந்த பைக் மெக்கானிக் வெங்கடேசன் (39) என்பவருக்குச்சொந்தமான சொகுசுக் காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வெளியூர் புறப்பட்டுச்சென்றுள்ளனர்.
பயணம் முடிந்து நேற்று அதிகாலை மாணவரகள் இருவரும் காரில் சென்னைக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது பூந்தமல்லி அருகே வரும்போது மாணவர்கள் ஓட்டி வந்த கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு காரும் சிறிய அளவில் சேதமடைந்த நிலையில், இருதரப்பினரும் சமாதானமாகச்செல்வதாகக் கூறி அங்கிருந்து வந்துள்ளனர்.
பின்னர் மாணவர்கள் இருவரும் காரை அதன் உரிமையாளர் வெங்கடேசனிடம் ஒப்படைத்துவிட்டு, கார் சேதத்திற்காக வாடகையுடன் சேர்த்து மொத்தமாக 20ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு கல்லூரிக்குச்சென்று விட்டனர். இதனையடுத்து நேற்று வெங்கடேசன் தனது நண்பர்கள் 4 பேருடன் கல்லூரி விடுதி முன் சென்று அஷ்ரஃப், ஆதித்யா ஆகிய இருவரையும் வெளியே வரும்படி அழைத்துள்ளார்.
பின்னர் வெளியே வந்த மாணவர்களிடம் நீங்கள் தானே காரை விபத்து ஏற்படுத்தினீர்கள் எனக்கூறி அவர்களைத் தான் வந்த காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச்சென்றுள்ளார். பின்னர் அவர்களை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு குடோனில் அடைத்து வைத்து 3 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் விடுவிப்போம் என அஷ்ரஃபின் சகோதரரை தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்தனர்.