சென்னை பாரிமுனையில் சுராணா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக தினேஷ் சந்த் சுராணா மற்றும் விஜய்ராஜ் சுராணா ஆகியோர் இருந்தனர். இந்தியாவில் தங்கம் மற்றும் எஃகு இறக்குமதியில் ஈடுபட்ட, சுராணா நிறுவனத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தியதில், அதன் அலுவலக லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ தங்கக் கட்டிகள், நகைகள் அப்படியே சீல் வைக்கப்பட்டன. தொடர்ந்து சுராணா மற்றும் எம்எம்டிசி அலுவலர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இவ்வாறு கடந்த 10 ஆண்டுகளாக இது சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்தி வந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையினரும் சட்டவிரோதப்பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, ராகுல் சுராணாவின் தந்தை தினேஷ் சந்த் சுராணா மற்றும் விஜய்ராஜ் சுராணா அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்தனர்.
இதனை அடுத்து சுராணா குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ராகுல் சுராணா மீது சென்னை தீவிர குற்றத்தடுப்புப் பிரிவும் வழக்குப்பதிவு செய்தனர். ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி வழக்குகளை விசாரிக்கும் இந்தப்பிரிவு நடத்திய விசாரணையில், சுராணா நிறுவனத்தின் பெயரில் போலியான கிளை நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருவதும் அதன் பெயரில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.8,045 கோடி கடன் பெற்று, செலுத்தப்படாமல் இருப்பதும் தெரியவந்தது.