சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் வாழைப் பழ வியாபாரம் கடையில் ரமேஷ் என்பவர் வேலைபார்த்து வருகிறார். விழுப்புரத்தைச் சேர்ந்த இவரும் இவரது மனைவி சத்யாவும், இரண்டு குழந்தைகளுடன் வாழை மண்டி அருகே வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கம்போல், மார்க்கெட்டில் வேலை பார்த்துவிட்டு, குழந்தைகளுடன் நேற்று(நவ.08) இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். அதிகாலை 4 மணியளவில் எழுந்து பார்க்கும் போது அவர்களது 3 மாத குழந்தை சஞ்சனா காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி ரமேஷும் அவரது மனைவி சத்யாவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அக்கம் பக்கம் தேடிப் பார்த்தும் குழந்தை கிடைக்காததால், உடனடியாக கணவன் மனைவி இருவரும் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், பணியிலிருந்த உதவி ஆய்வாளர் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து ரமேஷ் வேலை பார்த்த இடத்தில் தெரிந்த சமூக ஆர்வலர் சிவராமன் என்பவரிடம் உதவியை நாடியுள்ளார். அவர் குழந்தை புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு காவல் துறை நடவடிக்கை எடுக்குமா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதை வழக்கறிஞர் ஒருவர், சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் சமூக வலைதள கணக்கையும் இணைத்துப் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அண்ணா நகர் துணை ஆணையர் ஜவஹர் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடத்தொடங்கினர்.
முதற்கட்டமாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொண்டுவருகின்றனர். அப்பகுதியில் சுற்றித்திரிந்த திருநங்கை ஒருவர், இரண்டு நபர்களை நள்ளிரவு பார்த்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று(நவ.09) அதிகாலை கோயம்பேடு மார்க்கெட் பகுதியிலிருந்த சந்தேகப்படக் கூடிய, அந்த மூன்று நபர்கள் யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத காவல் உதவி ஆய்வாளருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.