சென்னை: மு.க. ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபொழுது சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டன. தற்போது சென்னை மாநகராட்சி சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுமார் 340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மூன்ற பாலங்கள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
வியாசர்பாடி ஜீவா ரயில் நிறுத்தம் அருகே கணேசபுரத்தில் நான்கு வழி மேம்பாலம் 175 கோடி ரூபாயிலும், தியாகராயர் நகர் உஸ்மான் சாலையிலிருந்து அண்ணா சாலை வரை இரண்டு வழி மேம்பாலம் 90 கோடி ரூபாயிலும், ஓட்டேரி நல்லா அருகே இரண்டு வழி மேம்பாலம் 75 கோடி ரூபாயிலும் கட்டப்படவுள்ளது.
இதற்காகத் திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும் ஒரு மாதத்திற்குள்ளாகத் திட்ட அறிக்கை இறுதிசெய்யப்பட்டு முதற்கட்ட மேம்பாலப் பணிகள் தொடங்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.