’தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் 2010’-யை திருத்தம் செய்ய வழிவகுக்கும் சட்ட திருத்த முன்வடிவை கடந்த மார்ச் 17 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, மசோதாவாக நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவானது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. கடந்த 8 மாதமாக கிடப்பில் இருந்த இந்த மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தச் சட்டத்தின்படி, இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.
அதாவது, பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப்பணிக்கு, பட்டப்படிப்புடன் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்புகளையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும்.