இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகக் காவல் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான 969 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வழங்கப்படும் 20 விழுக்காடு இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றாது தவிர்த்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
காவல்துறைத்தேர்வுகளில் எழுத்துத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு இறுதியாக நேர்முகத்தேர்வு என்று மூன்று நிலைகள் உள்ளன. தற்போதைய காவல் துணைஆய்வாளர்களுக்கான தேர்வில் இதுவரை எழுத்துத்தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் நேர்முகத்தேர்வு நடைபெறவிருக்கிறது. ஆனால், இத்தேர்வுகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வழங்கப்படும் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றாதது வன்மையான கண்டனத்திற்குரியது. இதுகுறித்து தேர்வர்கள், தேர்வாணையத்திடம் முறையிட்டபோது இறுதிப்பட்டியல் வெளியிடும்போது மட்டுமே இடஒதுக்கீடு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு, நேர்முகத்தேர்வு என்று ஒவ்வொரு நிலையிலும் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்பட்டால் மட்டுமே தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை முழுமையாக வழங்க முடியும். அதைவிடுத்து, தேர்வாணையம் குறிப்பிடுவது போல நேர்முகத்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், தொடக்கநிலைத் தேர்வுகளிலேயே தமிழ் வழியில் பயின்றவர்கள் புறக்கணிக்கப்படுவர்.
இதன்மூலம், தமிழ்வழியில் பயின்றவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்பதைக் காரணமாகக் காட்டி இடஒதுக்கீடு முழுவதுமாக நடைமுறைப் படுத்தப்படாமல் போகவே அதிக வாய்ப்புண்டு. துணை ஆய்வாளர் தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் வகுப்புவாரி இடஒதுக்கீடு பின்பற்றப்படும்போது, தமிழ்வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு மட்டும் இறுதியாக பின்பற்றப்படும் என்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அது முறைகேடுகளுக்கே வழிவகுக்கும்.