சென்னை: நந்தனத்தில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா கேரளாவில் இருந்து பொது விநியோகத் திட்டத்தில் வழங்கும் அரிசி கடத்தப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்தார். கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த அரிசி கடத்தலில், வாகனங்களில் சிக்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டில் 937 வழக்குகள் பதிவு செய்து 12,540 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்திருக்கிறோம். தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 2020-21 ஆண்டில் 11பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஓராண்டில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, வேலூர், சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் மட்டும் அல்லாமல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து சோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.