தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

2023-க்குள் தமிழ்நாட்டின் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 100% குடிநீர் இணைப்பு!

சென்னை: ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 2023 மார்ச் மாதத்திற்குள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 100 விழுக்காடு குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

sp velumani
sp velumani

By

Published : Nov 4, 2020, 11:45 AM IST

மத்திய ஜல் சக்தி துறையின் சார்பில் வருகின்ற 2024ஆம் ஆண்டிற்குள் கிராமப்புறங்களிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்க ஜல் ஜீவன் மிஷன் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த மாநிலங்களுடனான ஆலோசனைக்கூட்டம், டெல்லியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தலைமையில் நேற்று (03.11.2020) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமைச் செயலகத்திலிருந்து கலந்துகொண்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் திட்டபணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

சிறப்பு திட்டங்கள் குறித்து அமைச்சர் எஸ். பி. வேலுமணி கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பிலும், தமிழ்நாடு மக்களின் சார்பிலும் பாரத பிரதமர் அவர்களுக்கும் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் அவர்களுக்கும் 2024ஆம் ஆண்டிற்குள் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தியமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டிலுள்ள 79.395 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாட்டிலுள்ள ஊரகப்பகுதிகளில் 99.11 சதவீத பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தமிழ்நாடு அரசின் சார்பில் கிராமப்புற குடியிருப்பு பகுதிகளின் திருத்தப்பட்ட அடிப்படை தகவல்கள் கடந்த மே மாதம் ஜல் ஜீவன் மிஷன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் 388 ஊராட்சி ஒன்றியங்களில் 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 79,395 கிராமப்புற குடியிருப்புகள் உள்ளன.

கடந்த 01.04.2020 வரை 126,89,000 வீடுகளில் 21,92000 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,04,97,000 வீடுகளில் 40 இலட்சம் வீடுகளுக்கு 2020-21ஆம் ஆண்டிலும், 35 இலட்சம் வீடுகளுக்கு 2021-22ஆம் ஆண்டிலும் மற்றும் 30 இலட்சம் வீடுகளுக்கு 2022-23ஆம் ஆண்டிலும் குழாய் மூலம் குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2024ஆம் ஆண்டிற்கு ஓராண்டு முன்னதாகவே தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன். நடப்பு 2020-21ஆம் ஆண்டில் மத்திய அரசின் சார்பில் பங்களிப்பாக ரூ. 921 கோடி இத்திட்டத்தை நிறைவேற்ற அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் 19,74,000 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூபாய் 2,264 கோடியே 74 இலட்சம் மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கு 100 சதவீதம், குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்பொழுதுவரை, நடப்பு நிதியாண்டில் 6.10 இலட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது, இந்தாண்டின் இலக்கில் 18.2 சதவீதம் நிறைவேற்றப்பட்டு, தரபட்டியலில் வேறு இடத்தில் உள்ளது . மத்திய ஜல் சக்தி துறையின் சார்பில் 18.08.2020 அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் 15,120 பணிகளுக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணிகள் முன்னேற்ற நிலையில் உள்ளன.

அரசாணை மற்றும் வழிகாட்டுதல்களின்படி நிதி ஆதாரங்கள் பெறப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டு 2021 பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவேற்றப்படும். இப்பணிகள் கலந்தாலோசகர்கள் மூலம் ஆய்வு செய்யப்படும். இத்திட்டப்பணிகளை நிறைவேற்றிடவும், விரைந்து செயல்படுத்தவும், நிர்வாக அனுமதி பெற மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்திலுள்ள 12,525 கிராமப்பஞ்சாயத்துக்களுக்கும் இத்திட்டத்தை நிறைவேற்றிட செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் மாநில அளவிலான செயல்திட்டம் விரைவில் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் 2023 மார்ச் மாதத்திற்குள் தமிழகத்திலுள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கிறேன். என்றார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ். பழனிச்சாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் சி.என். மகேஷ்வரன், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர்கள் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details