ஹைதராபாத்:தற்போதைய காலகட்டத்தில் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள், அதனுடன் பல்வேறு பயனுள்ள ஸ்கீம்களையும் பாலிசிதாரர்களுக்கு வழங்குகின்றன. இதனால் காப்பீட்டுத் திட்டங்கள் சிறந்த முதலீட்டுத் திட்டங்களாக பார்க்கப்படுகின்றன. இதில் பலராலும் விரும்பப்படும் ஒரு சிறந்த காப்பீட்டு திட்டம் யுலிப்கள் (ULIP- Unit linked investment policies) ஆகும். இந்த யூலிப்களில், பாலிசிதாரர்கள் செலுத்தும் பிரீமியத்தின் ஒரு பகுதி, பங்குச் சந்தையில் அல்லது மியுட்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் பாலிசிதாரர்களுக்கு அவர்களது தினசரி கண்காணிப்பின் கீழ், வருவாய் ஈட்டப்படுவது புலனாகிறது. நீண்ட கால பணப்பலன்களை விரும்புவோர் இந்த யூலிப்களில் முதலீடு செய்கிறார்கள். அதேநேரம் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள் குறித்து கவனம் கொள்வோர் இந்த யூலிப்களில் முதலீடு செய்ய தயங்குவார்கள். ஆனால், பங்குச்சந்தையில் நுழைய சரியான நேரம் என்பது இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது யூலிப்கள், முதலீடு, காப்பீடு மற்றும் வரி விலக்கு தவிர, மேலும் சில நன்மைகளையும் வழங்குகின்றன. பாலிசிதாரர்கள் தங்கள் முதலீடு மற்றும் பாதுகாப்புத் திட்டங்களுக்குப் பொருத்தமான பாலிசியை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வழங்கப்படுகிறது. தங்கள் தேவைக்கு ஏற்ப முதலீட்டுத் திட்டங்களை மாற்றிக் கொள்ளும் வசதியையும் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. பாலிசிதாரர்கள் வருவாயை அதிகரிக்க புதிய முதலீட்டு திட்டங்களை மாற்றிக் கொள்ளலாம். பாலிசிகள் முதிர்ச்சியடையும் போது ஒரே நேரத்தில் பலன்களைப் பெறலாம்.