சென்னை: மாதம் சம்பளம் வாங்கி குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தான் தெரியும் மாத கடைசியில் ஏற்படும் வறுமையின் கஷ்டம். இஎம்ஐ, மருத்துவச் செலவு, உணவிற்கான செலவு, குழந்தைகளின் படிப்பிற்கான செலவு, மின்சாரக் கட்டணம், வீட்டு வாடகை என அடுக்கிக்கொண்டே போகலாம்.
எவ்வளவு பணம் வந்தாலும் வந்த இடம் தெரியாமல் அடுத்த நாளே காலியாகிவிடும். இதற்கு இடையில் எப்படிச் சேமிப்பது? என்ன செய்வது? என நம்மில் பலர் பலமுறை புலம்பி இருப்போம். உங்களுக்கான சேமிப்பை உருவாக்கவும், மாதக் கடைசியில் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்குக் கஷ்டப்படாத வகையிலும் ஒரு குடும்பத்திற்கான மாதாந்திர நிதிநிலையை எப்படித் திட்டமிடுவது எனப் பார்க்கலாம்.
மாதம் சம்பளம் வாங்கிய உடன் முதலில் என்ன செய்ய வேண்டும்.? சம்பளம் வாங்கிய உடன் பலரும் மேற்கொள்ளும் முதல் விஷயம் கடனை அடைப்பது மற்றும் செலவுகளை மேற்கொள்வதும்தான். இதன் காரணமாக வாழ்கையில் ஏதேனும் சிறிய அளவிலாவது முன்னேற்றம் ஏற்படுமா? எனக்கேட்டால் அது சாத்தியம் இல்லை. வாழ்க்கை மாத சம்பளத்தை நம்பி மட்டுமே நகரும். ஒரு கட்டத்தில் என்னடா இது வாழ்க்கை என்ற சலிப்பும் ஏற்படலாம். இதற்கு மாற்றாக நீங்கள் மேற்கொள்ள வேண்டியது உங்கள் சேமிப்பில் கவனம் செலுத்துவதுதான்.
சேமிப்பை எப்படி மேற்கொள்வது;மாதம் சம்பளம் வாங்கிய உடன் முதலில் அந்த சம்பளத்தில் இருந்து மூன்றில் ஒரு பங்கு அல்லது உங்களால் முடிந்த சிறிய தொகையைச் சேமிப்பிற்காக ஒதுக்க வேண்டும் அதையும் உங்கள் முதல் செலவாகவே கருத வேண்டும். கையில் சம்பளம் வாங்கிய 1 முதல் 5 நாட்களுக்குள் உங்கள் சேமிப்பு தொகையை வங்கிக் கணக்கிற்கோ அல்லது ஒரு கிராம் தங்கத்தின் அளவிற்கோ மாற்றுங்கள். அல்லது பணத்தை ஓரளவு சேமித்த பிறகு அதை வைத்து தங்கத்தில் முதலீடு செய்யுங்கள். அது சிறந்த ஒரு சேமிப்பாக இருக்கும்.
மாத செலவைப் பட்டியல் இடுங்கள்; மாதம் வீட்டிற்குத் தேவையான உணவுப் பொருட்கள், மின்சாரக் கட்டணம், இஎம்ஐ உள்ளிட்டவற்றைப் பட்டியலிட்டு அதே போல் சம்பளம் வாங்கிய 1 முதல் 5 நாட்களுக்குள் செலவு செய்து முடித்து விடுங்கள். ஒரு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை மொத்தமாக வாங்கி வைப்பதன் மூலம் மாதக்கடைசியில் உணவுப் பொருளுக்கான திண்டாட்டம் வராது. அதேபோல், நீங்கள் வாங்கிய பொருளைத் தேவை இல்லாமல் வீணடிக்காமல் ஒரு மாதம் வரை செலவு செய்ய வேண்டும் என்ற உத்வேகமும் பிறகும்.