இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 268.40 புள்ளிகள் (0.70 சதவிகிதம்) உயர்ந்து 38,363.47 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டான நிஃப்டி 70.20 புள்ளிகள் (0.61சதவிகிதம்) உயர்ந்து 11,509.80 வர்த்தகத்தை நிறைவு செய்தது. செப்டம்பர் 7ம் தேதி அதாவது ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த உயர்வை பங்குச் சந்தைகள் கண்டுள்ளன.
பொதுத்துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு, உள் கட்டமைப்பு, கட்டுமானம், வங்கி மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளைச் சேர்ந்த பங்குகளின் எழுச்சியால் பங்குச் சந்தை உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளதாக சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனாலேயே அதிக அளவில், வெளிநாட்டிலிருந்து முதலீடுகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும்,மார்ச் 31ம் தேதி வரை கட்டி முடிக்கப்படாமல் உள்ள கட்டடங்களுக்கு, அதன் உரிமையாளர்கள் உள்ளீட்டு பலன்களை பெறலாம் அல்லது ஜிஎஸ்டி முறைக்கு மாற்றிக்கொள்ளலாம் என்ற ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுவும் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.