இந்தியப் பங்குச்சந்தை கடந்த இரண்டு வாரங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வர்த்தகமாகிவருகிறது. கடந்த 12 நாள்களில் 11 நாள்கள் இந்தியப் பங்குச்சந்தை ஏற்றம் கண்டு தனது வர்த்தகத்தை நிறைவுசெய்துள்ளது.
குறிப்பாக, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று அதிகபட்சமாக 44 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது, பின்னர் 43,953-க்கு இன்றைய வர்த்தக நாளை நிறைவுசெய்தது.
கரோனா தடுப்பு மருந்து குறித்த நேர்மறை செய்திகள், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் ஆகியவற்றைத் தவிர பெரும்பாலான முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் மனநிலையில் உள்ளதாலேயே பங்குசந்தை தொடர்ந்து உயர்ந்துவருகிறது.
கரோனா தடுப்பு மருந்து வளரும் நாடுகளில் தற்போதுள்ள நிலையை மாற்றும் என்று முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். இதனால் அந்த நாடுகளில் அதிக முதலீடுகளை மேற்கொள்ள முதலீட்டாளர்கள் விரும்புவதாக பாங்க் ஆஃப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முன்னணி நிதி மேலாளர்கள் பெரும்பாலானோர் 2021ஆம் ஆண்டில் வளர்ந்துவரும் சந்தைகள் சிறப்பாகச் செயல்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். மேலும், 2021ஆம் ஆண்டில், முதலீட்டாளர்கள் நீண்டகால முதலீட்டிற்கான வளர்ந்துவரும் சந்தை, எஸ் & பி 500, எண்ணெய் ஆகியவற்றில் முதலீடு செய்ய ஆர்வமாகவுள்ளனர்.
சர்வதேச முதலீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 50 ஆயிரம் புள்ளியைத் தொடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், வரும் காலங்களில் சந்தை தொடர்ந்து காளையின் பிடியில் வர்த்தகமானால் சென்செக்ஸ் 2021 இறுதியில் 59 ஆயிரம் புள்ளிகளைத் தொடும் என்றும் சந்தை தொடர்ந்து கரடியின் பிடியில் வர்த்தகமானால் சென்செக்ஸ் 2021 இறுதியில் 37,300 புள்ளிகளில் வர்த்தகமாகும் என்றும் மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ”மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை வாங்க பலரும் விருப்பம்”