கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் இறுதி வாரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக இந்தியா கடும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், 2020-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 20 விழுக்காடு வரை சரிவடையும் என்று கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய புள்ளிவிவர அலுவலகம் 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்த தரவை ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடும். கரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.
இது குறித்து கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த காலாண்டில் பொருளாதார செயல்திறன் மிக மோசமாக இருக்கும். இதன் காரணமாக இந்தியாவின் அசல் ஜிடிபி 20 விழுக்காடு வரை சரியும் என்று மதிப்பிடுகிறோம்.
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. ஊரடங்கு காலத்தில் வேளாண்மை, நிதி நிறுவனங்கள், கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகள் உள்ளிட்டவற்றுக்கு அரசு விலக்கு அளித்திருந்தாலும், தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக இந்த துறைகள் முழு வீச்சில் இயங்க முடிவதில்லை.
மேலும், ஜிவிஏ எனப்படும் gross value added-ம் இந்தக் காலாண்டில் 19.9 விழுக்காடு வரை சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண்மை மற்றும் பொதுச் செலவுகளைத் தவிர அனைத்து துறைகளும் சரிவைச் சந்திக்கும்.
ஜூன் வரையிலான காலாண்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தொழிற்துறை 35.9 விழுக்காடும், சேவைகள் துறை 16.8 விழுக்காடும் சரிவடையும்.
இந்தியாவைப் போலவே பல்வேறு நாடுகளிலும் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் 2020-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்றுமதி 37 விழுக்காடு வரை குறைந்துள்ளது. வரி வசூலும் கடந்தாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 41 விழுக்காடு வரை குறைந்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெட்மெட்ஸ் நிறுவனத்தின் 620 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கும் ரிலையன்ஸ்!