ஹெச்டிஎஃப்சி, கோட்டக் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இன்று சரிவைச் சந்தித்தன. இதனால் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 242.37 புள்ளிகள் (0.76 விழுக்காடு) குறைந்து 31,443.38 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 71.85 புள்ளிகள் (0.78 விழுக்காடு) குறைந்து 9,199.05 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம் இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பங்குகள் நான்கு விழுக்காட்டிற்கும் மேல் சரிவைச் சந்தித்தது. அதேபோல என்.டி.பி.சி, கோட்டக் வங்கி, டைட்டன், பாரதி ஏர்டெல், பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் சரிவடைந்தன. மறுபுறம், இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் ஆறு விழுக்காட்டிற்கும் மேல் ஏற்றம் கண்டது. எம் & எம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி, டெக் மகேந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்தன.
காரணம் என்ன?
வீட்டு உபயோகப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகளும், நிதி நிறுவனத்தின் பங்குகளையும் முதலீட்டாளர்கள் விற்கத் தொடங்கியதால் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்தனர். இதுதவிர கோவிட்-19 தொற்றால் இந்தியாவில் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மதியம் வெளியானதையடுத்து இந்திய பங்குச் சந்தை மேலும் சரிவைச் சந்தித்தது.