நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பி.எஸ்.என்.எல் மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனமாகும். நாட்டின் பெரும்பாலான இடங்களிலும் தனது தொலைத்தொடர்பு சேவையை தடம் பதித்துள்ள பி.எஸ்.என்.எல், தலைநகர் டெல்லியில் எம்.டி.என்.எல் என்ற பெயரில் சேவை வழங்கிவருகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் பெரும் நிதிச்சுமையில் சிக்கி வருகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனமும் அதில் அடக்கம். இந்நிலையில், மே 22க்குப் பின் மத்திய அரசு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமா என பெரும் எதிர்பார்ப்பில் நிர்வாகத் தரப்பினர் உள்ளனர்.
சமீபத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பி.எஸ்.என்.எல். நிர்வாகிகள் நிர்வாகத் தரப்பினரின் எதிர்பார்ப்புகள்:
பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இருப்பினும் குறைவான கடன் வைத்திருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனமும் பி.எஸ்.என்.எல்தான். ஜியோ, வோடாபோன் போன்ற நிறுவனங்கள் 1 லட்சம் கோடி அளவில் கடன் வைத்திருக்கிறது. இதைக்கருத்தில் கொண்டு, மத்திய அரசிடம் இரண்டு முக்கிய எதிர்பார்ப்புகளை நிர்வாக தரப்பினர் முன்வைத்துள்ளனர்.
- முதலாவதாக, நீண்ட நாள் கோரிக்கையான 4ஜி ஸ்பெக்ட்ரம் சேவை உரிமையை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு அரசு வழங்க வேண்டும்
- இரண்டாவதாக, பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் பென்சன் தொடர்பான கோரிக்கைகளைத் தொழிலாளர் நலன் கருதி நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக விருப்ப ஓய்வு பெறும் ஊழியரின் சேம நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் தற்காலிக நிதியாக சுமார் 7 ஆயிரம் கோடி தொகையை பி.எஸ்.என்.எல்-க்கு புதிய அரசு அளிக்க வேண்டும் என நிர்வாகத் தரப்பு எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.