தமிழ்நாடு அரசின் வேளாண் விளைப்பொருள், கால்நடை ஒப்பந்த சாகுபடி மற்றும் சேவைகள் சட்டத்திற்கு அண்மையில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக ஒப்பந்த விவசாயத்திற்கு சட்டம் இயற்றப்பட்டது தமிழ்நாட்டில்தான் என்று கூறும் அரசு, இதன்மூலம் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும் என்கிறது. ஆனால் இந்தச் சட்டத்திற்கு பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம், "வேளாண் பொருள்களின் விலை தொடர்பான ஒப்பந்தத்தை அலுவலர்கள் முன்னிலையில் விவசாயிகளும் நிறுவனங்கள் அல்லது வர்த்தகர்கள் ஏற்படுத்திக்கொள்வர் எனச் சட்டம் குறிப்பிடுகிறது.
விவசாய உற்பத்திக்கான விலையை தீர்மானிப்பதிலிருந்து அரசு விடுவித்துக்கொள்ளும் நடவடிக்கையே இது. நிறுவனங்கள் தங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையிலேயே விலையை நிர்ணயிப்பார்கள். இதனால் இச்சட்டம் விவசாயிகளுக்கு உதவாது. பெரு நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்கவே இந்தச் சட்டம் உதவும். உற்பத்தி செலவுக்கு மேல் 50 விழுக்காடு கூடுதலாக விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும் என்கிற சுவாமிநாதன் குழு பரிந்துரையிலிருந்து விலகும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது" என்று கூறினார்.
விளை பொருள்கள் (கோப்புப்படம்)) இதிலுள்ள முக்கிய பிரச்னை ஒன்றையும் முன்வைத்த அவர் "ஒப்பந்தத்தின்படி நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான வேளாண் பொருள்களை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என வற்புறுத்துவர்கள். இதனால் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்படும். உணவுப் பொருள்களுக்காக அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்" என எச்சரித்தார்.
ஒப்பந்தச் சட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒப்பந்த சட்டத்திற்கு லெட்டர் பேட் அமைப்புகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இதில் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் கூறினார். அதிக விளைச்சல் ஏற்படும் காலங்களில் விளை பொருள்களின் விலை வீழ்ச்சி அடைவதிலிருந்து இந்தச் சட்டம் பாதுகாப்பைத் தரும் என்றும் தெரிவித்தார்.
ஆனால், சந்தையில் விலை குறைவாக இருக்கும்போது லாப நோக்கத்துடன் செயல்படும் நிறுவனங்கள் எப்படி விவசாயிகளிடமிருந்து அதிக விலை கொடுத்து விளை பொருள்களை வாங்கும் என்பதே விவசாயிகளின் கேள்வியாக உள்ளது.
இது தொடர்பாக பேசிய வேளாண் பொருளாதார நிபுணர் பேராசிரியர் வெங்கடேஷ் அத்ரேயா, "விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னை விளை பொருள்களுக்கு சீரான விலை இல்லாதது. அதிக அளவில் விலை ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் இரண்டு பயிர்களில் தக்காளி, வெங்காயமும் உள்ளன. ஒரே நேரத்தில் ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்பனையாகும். ஒரு சில நேரத்தில் ஒரு தக்காளிப் பழமே ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
பொருளாதார நிபுணர் பேராசிரியர் வெங்கடேஷ் அத்ரேயாவின் பேட்டி சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைப்படி ஒவ்வொரு பொருளுக்கும் விலையை உறுதிப்படுத்தும் வகையில் நிதியை ஏற்படுத்த வேண்டும். சந்தையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்போது அதன்மூலம் விவசாயிகளுக்கு நஷ்டஈடு கொடுக்கவேண்டும். வெங்காயத்தின் விலை ஏறும்போது அதன் ஏற்றுமதியை அரசு தடைசெய்கிறது. அதே சமயத்தில் விலை குறையும்போது அவர்களுக்கு நியாமான விலை கொடுப்பதில்லை.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு அறுவடை காலத்திலேயே சுவாமிநாதன் ஆணையம் முன்வைத்துள்ள சூத்திரத்தின் அடிப்படையில், மொத்த உற்பத்தி செலவு மீது கூடுதலாக 50 விழுக்காடு என்ற அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும். சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்த தொகை வழங்கப்படுவதில்லை. அரசு இதனை கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது, ஆனால் நிறைவேற்றவில்லை. அதேபோல் விளை பொருள்களை தேக்கிவைப்பதற்கான கிடங்குகளை அரசு உருவாக்க வேண்டும். இதனால் உணவு தானியங்கள் சாலையில் தூக்கி வீசப்படுவது தவிர்க்கப்படும்.
தாராளமயமாக்கல் நடவடிக்கைக்குப் பிறகு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமான கொள்கைகளை மட்டுமே எடுக்க வேண்டும் என அரசு நினைக்கிறது. அந்நிய முதலீடுகள் பெற்று புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என நினைக்கிறது. அரசின் கொள்கையில் மாற்றம் தேவைப்படுகிறது.
அரசு கொள்முதல் விலையை அறிவிப்பது மட்டுமில்லாமல் அதனை அறுவடை காலத்திலேயே கொள்முதல் செய்ய வேண்டும். சரியான வட்டி விகிதத்தில் பயிர்க்கடன் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் விவசாயக் கொள்கை ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
பொருளாதார நிபுணர் பேராசிரியர் வெங்கடேஷ் அத்ரேயாவின் பேட்டி ஒப்பந்த விவசாயத்தில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. ஒப்பந்தப்படி விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்காதபோது அரசு நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒப்பந்த விவசாய சட்டத்தில சிறு, குறு விவசாயிகளைப் பாதுகாக்கும் அம்சங்கள் இருக்க வேண்டும். இந்த கண்காணிக்கும் அமைப்பில் விவசாயிகள் இடம்பெற வேண்டும். ஒருதலைபட்சமாக நிறுவனங்கள் விவசாயிகளின் ஒப்பந்தத்தை மீறுவதை தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.