ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், தேர்ட் பில்லர் (Third Pillar) என்னும் புத்தகம் வெளியிடுகிறார். இது தொடர்பாக பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அரசு தனது சர்ச்சைக்குரிய பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
பண மதிப்பிழப்பு
"பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பின்நோக்கி பார்த்து அதிலிருந்து நாம் என்ன கற்றோம் என்பதை சிந்திக்க வேண்டும். அது உண்மையில் பயனடைந்ததா? அல்லது தோல்வியில் முடிந்ததா? அதிலிருந்து வந்த நன்மை-தீமைகள் என்ன? என சுய பரிசோதனை செய்ய வேண்டும். ஒவ்வொரு அரசும் கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று இது" என தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு
இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்னை குறித்தும் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். "நாட்டில் நம்பகத்தன்மை வாய்ந்த வேலைவாய்ப்பு தகவல்கள் தேவைப்படுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையம் கொடுக்கும் வேலைவாய்ப்பு தகவல்களை நம்ப முடியாது. வேலைவாய்ப்பு புள்ளி விவரங்களை சேகரிப்பதை நாம் மேம்படுத்த வேண்டும்.
வேலைவாய்ப்பு தகவல்களின் மத்திய அரசு மாற்றங்கள் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழும் இந்த நேரத்தில், எங்கள் நாட்டு தகவல்கள் உண்மையானவை என இந்த உலகத்திற்கு உணர்த்த வேண்டும். இந்தியாவில் போதிய அளவில் புதிய வேலைகள் உருவாக்கப்படுவதில்லை.
நாட்டிலுள்ள வேலைவாய்ப்பின்மை குறித்து நாம் போதிய கவனம் செலுத்தவில்லை என எனக்கு வருத்தமாக உள்ளது. தேசப் பாதுகாப்பிற்கு வலிமையான உள்நாட்டு பொருளாதாரம் மிகவும் அவசியம்" என தெரிவித்தார்.