ராமநாதபுரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பாக அனைத்து வங்கிகள் ஒருங்கிணைப்பு குழுவின் நடப்பு நிதி ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
அதன்பின்பு பேசிய மாவட்ட ஆட்சியர், "முன்னணிபொதுத் துறை வங்கிகளான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்டு வங்கி, மாவட்ட அனைத்து வங்கிகள் ஒருங்கிணைப்பு குழு ஆகியவை இணைந்து நடப்பு நிதி ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை தயாரித்துள்ளது.
அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு 2021-22 நிதி ஆண்டிற்கு ரூ .5405.49 கோடி வங்கிகள் கடனாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ .4815.30 கோடி ரூபாயைவிட 9.28 விழுக்காடு அதிகமாகும் .
குறிப்பாக, வேளாண் துறைக்கு மட்டும் ரூ 3399.84 கோடி கடன் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையானது கடந்தாண்டு இலக்கைவிட 10.50 விழுக்காடு கூடுதலாகும்.
- சிறு, குறு , நடுத்தர தொழில் துறைக்கு ரூ. 193.11 கோடி
- வீட்டுக்கடன் ரூ. 344.00 கோடி
- கல்விக்கடன் ரூ. 304.00 கோடி
- ஏற்றுமதி தொழில்கள் சார்ந்த துறைக்கு ரூ. 38.00 கோடி
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு ரூ. 22.42 கோடி
- சமூக உள்கட்டமைப்புக்கு ரூ 52.37 கோடி
- இதர கடன்களுக்கு ரூ. 352.00 கோடி
என மொத்தம் 5405.49 கோடி ரூபாய்க்கு கடன் திட்ட அறிக்கையானது தயார் செய்யப்பட்டு வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" அவர் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் கடன் திட்ட அறிக்கையை வெளியிட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தூத்துக்குடி மண்டல, முதுநிலை மண்டல மேலாளர் ஸ்ரீராம் பெற்றுக்கொண்டார்.