நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை வேகப்படுத்தவும், அரசின் நிதிப்பற்றாக்குறையைச் சீர் செய்யவும் மத்திய அமைச்சரவையின் பொருளாதாரத்திற்கான குழு முக்கிய முடிவை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ' பாரத் பெட்ரோலியம், சிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கான்கர் (CONCOR), டி.எஃச்.டி.சி(THDC), நீப்கோ (NEEPCO) உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட நிறுவனங்களில் முதல் மூன்று நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், சிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கான்கர்(CONCOR) ஆகிய நிறுவனங்கள் முழுமையாகத் தனியர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டி.எஃச்.டி.சி (THDC), நீப்கோ (NEEPCO) ஆகிய இரு நிறுவனங்களின் பங்குகள் தனியார் வசம் கொடுக்கப்பட்டு, அதன் நிர்வாகப் பொறுப்பு என்.டி.பி.சி (NTPC) என்ற மற்றொரு பொதுத்துறை நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது. எனவே நிர்வாக ரீதியாகப் பார்க்கும்போது இந்த இரு நிறுவனங்களும் தற்போதும் பொதுத்துறை நிறுவனங்களாகவே செயல்படும்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட முடிவு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. தன்னிடம் உள்ள 53.3 சதவிகிதப் பங்குகளை முழுமையாக விற்கப்போவதாகத் தெரிவித்துள்ள அரசு அதன் நிர்வாகத்தையும் தனியார் வசம் ஒப்படைக்க எடுத்த முடிவு உறுதியான முடிவாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல், சிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் 63.7 சதவிகிதப் பங்குகளை முழுமையாகவும், கான்கர் நிறுவனத்தின் 54.8 சதவிகிதப் பங்குகளில் 30.8 சதவிகிதப் பங்குகளையும் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. பங்குச்சந்தையில் ஏலம் விடப்பட்ட நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், சிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கான்கர் ஆகிய நிறுவனங்களின் மதிப்பு முறையே, 62 ஆயிரத்து 800 கோடி, இரண்டாயிரம் கோடி, 5 ஆயிரத்து 700 கோடியாகும்.
இந்த மூன்று நிறுவனங்களின் மூலம் 70 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அரசு திரட்டவுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் இதுவரை 17 ஆயிரத்து 364 கோடி ரூபாய் திரட்டப்பட்ட நிலையில் மேற்கொண்ட தொகை பெரும் மூலதனமாகக் கருதப்படுகிறது.