ஆஸ்பைரிங் மைனட்ஸ் என்ற நிறுவனம் இளைஞர்களின் வேலைத் திறன் குறித்தும் புதிதாக வேலைக்கு சேர்பர்களிடமிருந்து நிறுவனங்களின் எதிர்பார்ப்பு குறித்தும் ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஆய்வறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் வேலை சார்ந்த திறன்களை மேம்படுத்திக் கொள்வதில் இந்தியர்கள் மிகவும் பின் தங்கியுள்ளதாக விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மக்கள் தொகையில் இந்தியாவைவிட 4 மடங்கு குறைவான அமெரிக்கர்கள், தொழில்நுட்ப வேலைத்திறனில் 4 மடங்கு அதிகப்படியான பங்களிப்பை அளிக்கின்றனர். ஒட்டுமொத்த இந்தியர்களில் 3 சதவீதம் பேர் மட்டுமே ஆர்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், மெஷின் லர்னிங் போன்ற துறை சார்ந்த அறிவுத் திறனைப் பெற்றுள்ளனர். இன்றைய நவீன யுகத்தில் இது மிகவும் பின் தங்கிய நிலை என ஆஸ்பைரிங் மைனட்ஸ் துணை நிறுவனர் வருண் அகர்வால் கூறியுள்ளார்.
அத்துடன் நாலேட்ஜ் எக்கானமி எனப்படும் அறிவுசார் பொருளாதார அறிவுத் திறன் 89 சதவீத இந்தியர்களுக்கு இல்லை எனவும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்த சிக்கல்களுக்குக் காரணம் இந்தியாவின் உயர்கல்வி முறையே என அறிக்கையின் முடிவுகள் தெரிவிக்கின்றன. பொறியாளர்கள் செயல்முறை மூலமே கற்றுக்கொள்ள முடியுமே தவிர, படிப்பதன் மூலம் திறன் மேம்பாடு ஏற்படாது. ஆனால் இந்தியாவிலோ தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தித் துறை சார்ந்த அடிப்படை புரிதல்கள் மற்றும் நடைமுறை அம்சங்கள் கல்விக்கூடங்களில் பயிற்றுவிக்கப்படுவதில்லை. வெறும் 36 சதவீதம் மாணவர்களே கற்கும் போது தொழிற்சாலைகளுக்குச் சென்று தொழிற்பயிற்சியை அறிமுகம் செய்துகொள்கின்றனர். தங்கள் தேர்வு சார்ந்த கல்வியைத் தாண்டிய அறிமுகம் ஏற்படுத்திக்கொள்ளாமலே 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலைச் சூழலுக்கு வருவதே இந்த பின்னடைவுக்குக் காரணம் எனப் புள்ளி விவரத்துடன் வெளிப்படுத்துகிறது இந்த ஆய்வறிக்கை.
சமீபகாலமாகவே நாட்டில் வேலைவாய்ப்பின்மை குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பிவரும் நிலையில் இந்த அறிக்கை முடிவுகள் பெரும் எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது.