வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளை உடனடியாக கையாளும் வகையில், இந்தியன் வங்கி சார்பில் மையப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கு நிலையத்தை (Centralised account processing center) இந்தியன் வங்கி செயல் இயக்குநர் எம்.கே.பட்டாச்சார்யா இன்று காலை திறந்து வைத்தார்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இந்தியன் வங்கி கிளைகளில் துவங்கப்படும் கணக்குகளுக்கான, அலுவலகப் பணிகள் இம்மையத்தில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கணக்கு தொடங்குவது பிழையின்றியும், விரைவாகவும் நடைபெறும். முதற்கட்டமாக சென்னையில் தொடங்கப்படும் கணக்குகள் இங்கு பரிசீலிக்கப்படும் என்றும், பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளில் தொடங்கப்படும் வங்கி கணக்குகளும், அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தொடங்கப்படும் கணக்குகளும் பரிசீலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.கே.பட்டாச்சார்யா, " கரோனா காலத்தில் கடனைத் திரும்ப செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசத்தை பயனாளர்கள் அதிகளவில் பயன்படுத்தினர். பின்னர் அது வெகுவாக குறைந்தது. தொற்று காரணமாக தொழில், வருவாய் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட சிறப்புக் கடன், அவசரக் கடன் உதவி திட்டத்தின் கீழ், 6 ஆயிரம் கோடி ரூபாய் கடன், 3 லட்சத்து 60 ஆயிரம் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு 2,500 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது " என்றார்.