உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முன்னணி தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சுமார் 65,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் திரட்டப்பட்டு அதன் மூலம் 3 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘உலகின் 3ஆவது பெரும் சக்தியாக இந்தியா முன்னேறும்’ - அமித்ஷா நம்பிக்கை
லக்னோ: 2024ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதர சக்தியாக இந்தியா முன்னேறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் பேசிய அமித் ஷா, ‘உலகளவில் இந்தியா தற்போது ஐந்தாவது பெரிய பொருளாதார சக்தியாக விளங்குகிறது. வரும் 2024ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை மூன்றாவது இடத்திற்கு முன்னேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் உத்தரப் பிரதேச மாநிலம் முக்கியமானதாகக் கருதப்படுவது வழக்கம். அதேபோல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் உத்தரப் பிரதேச மாநிலம் முக்கிய பங்களிப்பை மேற்கொள்ளும். அதற்கு இந்த மாநாடு வழிவகை செய்யும் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.