வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட், நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. கரோனா பரவலால் மிகப்பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நேரத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே உள்ளது. உலக வணிகம் முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், ஏற்றுமதியாளர்கள் இந்த பட்ஜெட்டை உற்றுநோக்கியிருக்கிறார்கள்.
இது பற்றி நம்மிடம் பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா சண்முகம், "உலகளவில் இந்தியாவில் தான் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகளவில் உள்ளது. இதனால் இங்கு உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை அதிகரிப்பதோடு, ஏற்றுமதியில் போட்டி போட முடியாத நிலையும் உள்ளது. இதனால் கூடுதலாக 2% வட்டி மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும். பின்னலாடை ஏற்றுமதி நிறுவன ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை நிறுவனங்கள் சார்பில் அரசே ஏற்க வேண்டும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கினால்தான் இனி தொழிலையே தொடர முடியும்.
பருத்திக்கு ஈடாக பாலியேஸ்டர் போன்ற செயற்கை ரக பின்னலாடைகளையும் ஊக்குவித்தால் ஏற்றுமதி பன்மடங்கு அதிகரிக்கும். நீண்ட நாள் கோரிக்கையான, திருப்பூரில் பின்னலாடை தொடர்பான ஆராய்ச்சி மையம் அமைத்தால், மாறி வரும் காலச்சூழலுக்கு ஏற்ப சிறிய நிறுவனங்களும் புதிய பொருட்களை கண்டுபிடித்து தயாரிக்க முடியும்" என்றார்.
வரவிருக்கும் பட்ஜெட்டில் நாட்டில் மெகா பின்னலாடை பூங்காக்களை நாடு முழுவதும் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதலமைச்சரும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தமிழகத்தில் 2 பூங்காக்களை அமைக்க கோரியிருந்தார். ஆனால், இது தேவையற்றது என்கிற ராஜா சண்முகம், "சீனாவிலிருந்து தங்களது உற்பத்தியை இந்தியாவுக்கு கொண்டு வரும் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கவே, மத்திய அரசு மெகா பூங்காக்களை அமைக்கவுள்ளது. இதனால், ஓரிரு பெரு நிறுவனங்கள் மட்டுமே பயனடையும். திருப்பூரில் கூட்டுறவுடன் செயல்படும் ஏராளமான சிறிய வகை தொழிற்சாலைகளை வளர்க்கும்படியான திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்” என்கிறார்.