பிரெக்ஸிட்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதுதான் பிரெக்ஸிட் என்று அழைக்கப்படுகிறது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு அங்கமாக இருக்கும் பிரிட்டன், அதிலிருந்து வெளியே வர வேண்டும் என அந்நாட்டினர் கருத்து தெரிவித்தனர்.
இதனையடுத்து, 2016ஆம் ஆண்டு அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மையானோர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற ஆதரவு தெரிவித்து வாக்களித்திருந்தனர். இதனையடுத்து 2019 ஏப்ரல் 12ஆம் தேதிக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முடிவெடுத்தது பிரிட்டன். ஆனால் இதில் பல குழப்பங்களும் கூடவே வந்தன.
பிரெக்ஸிட் டீல்
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே சந்தை. உறுப்பு நாடுகளில் உள்ள பொருட்களும், மனிதர்களும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு எளிமையாக சென்று வர முடியும். ஆனால் பிரெக்ஸிட் அமலுக்குப் பிறகு மற்ற ஐரோப்பிய நாடுகளிலுள்ளவர்கள் பிரிட்டன் சென்று வருவதில் சிரமம் ஏற்படும். அதேபோல்தான் பிரிட்டனில் உள்ளவர்கள் மற்ற நாடுகளுக்குச் சென்று வருவதிலும் சிரமம் ஏற்படும். இதனை முறைப்படுத்தவே பிரெக்ஸிட் உடன்படிக்கை தயார் செய்யப்பட்டது.
உலகை மிரட்டும் பிரெக்ஸிட்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பின், பிரிட்டனும் மற்ற நாடுகளும் போக்குவரத்து, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை வருங்காலத்தில் எவ்வாறு கையாளும் என்பது தொடர்பாக பிரிக்ஸிட் ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டது. ஆனால் பிரிட்டன் பிரதமர் தெரெசா மே-இன் பிரெக்ஸிட் வரைவு உடன்படிக்கையை அந்நாட்டு நாடாளுமன்றம் மூன்று முறை நிராகரித்தது. எந்த ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் வரைவு பிரெக்ஸிட் (No deal brexit) உடன்படிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
ஒருபுறம் பிரெக்ஸிட் ஒப்பந்தம் பிரிட்டனுக்கு சாதகமாக இல்லை என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. மற்றொருபுறம் பிரெக்ஸிட் உடன்படிக்கையில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இதனால் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் வலம் வந்தார் தெரெசா மே. இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற குறிக்கப்பட்ட தேதியான ஏப்ரல் 12ஆம் நெருங்கி வந்தது. இதனால் எந்த உடன்படிக்கையும் செய்யாமல் பிரிட்டன் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது பல்வேறு குழப்பத்திற்கு வழிவகுக்கும். இது பிரிட்டன் பொருளாதாராத்தை பாதிப்பதுடன் ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. இதனால் இந்திய பொருளாதாரத்திலும் மோசமான விளைவுகள் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துவந்தனர்.
கடைசி நேரத்தில் தீர்வு
இந்த நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை ஜெர்மன் அதிபர் ஏஞ்ஜெலா மெர்கெல் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோரை சந்தித்து பிரெக்ஸிட் தேதியை நீட்டிக்கும் தனது கோரிக்கைக்கு ஆதரவு திரட்டினார் தெரெசா மே. இதை தொடர்ந்து நடந்த ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில், பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட் காலக்கெடுவை அக்டோபர் 31 வரை நீடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டுக்கு சற்று விடிவு கிடைத்தாலும் இது தற்காலிக தீர்வுதான். அதற்குள் பிரிட்டன் நாடாளுமன்ற பிரெக்ஸிட் வரைவுத் திட்டம் ஒன்றுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.
பொது வாக்கெடுப்பின்படி, பிரெக்ஸிட்டை அமல்படுத்த தெரெசா மே முனைப்புக் காட்டினாலும் தற்போது பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டாம் என பலரும் கூறி வருகின்றனர். இதனால் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவருகிறது.