சென்னை: அமைச்சர் கே. சி. வீரமணி தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவை வரி திருத்தச் சட்ட முன்வரைவை பேரவையில் தாக்கல் செய்தார்.
அதில், “2017ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் 19/2017 ) இயற்றியது. இந்த வரிச் சட்டத்திற்குள் மதிப்புக்கூட்டு வரி, ஆடம்பர வரி, கேளிக்கை வரி, பந்தய வரி, விளம்பர வரி, உள்ளூர் பகுதிகளில் இயக்கு ஊர்திகள் நுழைதல் மீதான வரி மற்றும் மேல்வரியும் உள்ளடங்கியுள்ளன.
எனவே, 1949ஆம் ஆண்டு தமிழ்நாடு சர்க்கரை ஆலைகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் XV1949) 14ஆம் பிரிவின் கீழ் கரும்பின் மீது மேல்வரி வசூலிக்கும் தொடர்புடைய வகைமுறையானது நீக்கறவு செய்யப்படுதல் வேண்டும். அதற்கிணங்கிய வகையில் தமிழ்நாடு சட்டம் 19 / 2017 - இன் 173 ஆம் பிரிவினை தக்கவாறு திருத்துவதென முடிவு செய்துள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.
இச்சட்டமுன்வடிவு மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் கரும்பின் மீது மேல்வரி வசூலிக்கும் வகைமுறையானது ரத்து செய்து சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் ஒருமனதாகப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.