பொதுத்துறை வங்கிகள் இணைப்பு என்ற அறிவிப்பில் எந்தவித மாற்றமும் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி ஏப்ரல் 1ஆம் தேதி இந்த நடவடிக்கை அமல்படுத்தப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நாட்டின் பத்து பொதுத்துறை வங்கிகளை நான்காக இணைக்கப்படுவதாகவும், நிதி - நிர்வாக சிக்கலை மேம்படுத்தும் விதத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதன்படி பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் காமர்ஸ் ஆகியவை ஒன்றாக இணைக்கப்படுகின்றன. அதேபோல், அலகாபாத் வங்கியுடன் இந்தியன் வங்கி, கனரா வங்கியுடன் சின்டிகேட் வங்கி இணைக்கப்படுகிறது. அத்துடன், யூனியன் வங்கியுடன் கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி இணைக்கப்படுகிறது.