தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

நிதியமைச்சரின் அறிவிப்புகள் எல்லாம் சரிதான்... அதற்கு எங்கிருந்து பணம் வரும்? - பொருளாதார வல்லுநர்கள் பார்வை

கரோனா காலங்களில் நாட்டின் பொருளாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து அம்ச பொருளாதாரத் திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். அந்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்த எங்கிருந்து பணம் திரட்டப்படும் என, பொருளாதார வல்லுநர் பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

where will center get funds economic package
where will center get funds economic package

By

Published : May 18, 2020, 2:56 PM IST

Updated : May 18, 2020, 3:13 PM IST

சென்னை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த திட்டங்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்கள் எங்கிருந்து வரும் என பொருளாதார வல்லுநர் பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட தொடர் ஊரடங்கின் காரணமாக, பாதிப்புக்குள்ளான பொருளாதாரத்தை ஊக்குவித்து, மீண்டும் வளர்ச்சியை ஏற்படுத்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்டது.

பொருளாதார வல்லுநர் பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி

அந்த அறிவிப்புகள் குறித்து ஓய்வுப் பெற்ற வருமானவரித்துறை அலுவலரும், பொருளாதார வல்லுநருமான பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி ஈடிவி பாரத்திடம் பேசினார். அதன் விவரம் வருமாறு....!

கவர்ச்சி அம்சங்கள்...!

சிறு, குறு நிறுவனங்களுக்குக் கடன் உத்தரவாதம், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு கடன் வசதி, 200 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள ஒப்பந்தப்புள்ளியில் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமே பங்குபெற முடியும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக வேலை வாய்ப்புக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை வரவேற்கத்தக்கது.

நிதி அறிவிப்புகள்... ஆனால் எங்கிருந்து வரும்?

மத்திய அரசு சிறு, குறு தொழில்களுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது. மின்பகிர்மான நிறுவனங்களுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய், நிலக்கரி உள்கட்டமைப்புக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் என, பல்வேறு திட்டங்களுக்கு ஏராளமான நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றுக்கான நிதி ஆதாரம் என்ன என்பதை மத்திய அரசு தெளிவாக குறிப்பிடவில்லை.

அறிவிப்புகள் சரி... தெளிவு இல்லையே!

மூலிகைச் செடிகள் வளர்ப்பு திட்டத்துக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. எதன் அடிப்படையில் இந்தத் தொகை ஒதுக்கப்பட்டது. ஏன் இது கூடுதலாக ஒதுக்கப்படவில்லை அல்லது குறைவாக ஒதுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. அதேபோல் நிலக்கரி உள்கட்டமைப்புக்காக, 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஆய்வு நடத்தப்பட்டதா, யார் இந்தத் தொகையை நிர்ணயம் செய்தது, எத்தனை நாட்களில் இந்தப் பணத்தை செலவு செய்யப் போகிறீர்கள் என்ற எந்த கேள்விக்கும் விடையில்லை. எந்தத் திட்டமும் முழுமைப்பெறவில்லை.

நிதியை எங்கிருந்து திரட்டலாம்...

தற்போது அரசின் வருவாய் குறைந்துள்ள நிலையில், பல வழிகள் மூலம் அரசு வருவாயை அதிகரிக்க முடியும். அறக்கட்டளைகள் வாயிலாக மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்களுக்கு வரி விதிக்கப்படவில்லை. ஆனால், அவர்கள் மக்களிடம் இருந்து ஏராளமான பணம் பெறுகிறார்கள். அவர்களுக்கு வரி விதிப்பதன் மூலம் நமக்கு தேவையான நிதி கிடைக்கும்.

அதேபோல், பினாமி சொத்துக்களைப் பறிமுதல் செய்வதன் மூலமாக நிதி திரட்டலாம். புதிய முதலீடுகளை ஈர்க்கலாம்; வேலை வாய்ப்புகளை அதிகரிக்கலாம் எனக்கூறி, பெரு நிறுவன வரியை குறைத்தனர். ஆனால், தற்போது அதற்கு எதிர்மாறாக நடந்துவருகிறது. இதனால் பெரு நிறுவன வரி உயர்த்தலாம்.

இவ்வாறு பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

Last Updated : May 18, 2020, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details