இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைத்து விஷயங்கள் வேகமாகப் பகிரப்பட்டு அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தில் நன்மைக்கு நிகராகவே வம்பும் சேர்ந்து வருவது சமீப காலமாகவே அதிகரித்துள்ளது. அதில் குறிப்பிடத்தக்க பிரச்னைதான் போலிச் செய்தி அல்லது போலித்தகவல் பரப்புவது. இந்த சிக்கலைச் சரி செய்வதற்கு இரு முன்னணி நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.
மென்பொருள் தொழில்நுட்ப கூட்டமைப்பு எனப்படும் நாஸ்காம் அமைப்பு வாட்ஸ் ஆப் நிறுவனத்துடன் இந்தியாவில் போலிச் செய்தி குறித்த விழிப்புணர்வில் ஈடுபடவுள்ளது. இதுகுறித்து நாஸ்காம் நிறுவன தலைமை செயலதிகாரி அசோக் பமிதி, வாட்ஸ்-ஆப் போன்ற செயலிகளால் தகவல் பரிமாற்றம் போன்ற நன்மைகள் இருந்தாலும், வெறுப்பையும், கோபத்தையும் விதைக்கவும் இது கருவியாகப் பயன்படுகிறது. எனவே நம் குடிமக்களுக்குப் போலிச் செய்திகளைப் பகுத்தறியும் திறனை வளர்க்கவே இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளோம். இது நிச்சயம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன் என்றார்.