நடப்பாண்டின் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த, நான்காவது காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் 177.5 விழுக்காடு கிடுகிடுவென உயர்ந்து இரண்டாயிரத்து 331 கோடியாக அதிகரித்துள்ளது. இது சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், சமீபத்திய கட்டண உயர்வு காரணமாகவும் நிகழ்ந்துள்ளது.
ஜியோவின் நிகர லாபம் முந்தைய ஆண்டில் 840 கோடி ரூபாயாக இருந்தது. அதுவே டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ஆயிரத்து 350 கோடி ரூபாயாக இருந்தது.
அதனுடன் ஒப்பிடும்போது நிகர லாபம் 72.7 சதவீதம் அதிகரித்துள்ளது. நான்காவது காலாண்டில் ஜியோவின் முழுமையான வருவாய் 14 ஆயிரத்து 835 கோடியாக இருந்தது.
இது குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி கூறுகையில், "உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து அடுத்த கட்ட வளர்ச்சியில் ஜியோ நிறுவனம் களமிறங்குகிறது” என்றார்.
மேலும், "உலகின் சிறந்த தொழில்நுட்ப திறன்களைப் பயன்படுத்தி பொழுதுபோக்கு, வர்த்தகம், தகவல் தொடர்பு, நிதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிற்கான டிஜிட்டல் தொழில்நுட்ப தளங்களுடன் முழுமையான சிறந்த இணைப்பு நெட்வொர்க்குடன் இந்தியாவை உண்மையான டிஜிட்டல் சமூகமாக மாற்ற நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். எங்கள் கவனம் இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள், 120 மில்லியன் விவசாயிகள், 30 மில்லியன் சிறு வணிகர்கள் ஆகியோர் மீதும் இருக்கும்” என்றார்.