இந்தியாவின் பாதுகாப்பு, இந்தியர்களின் தனியுரிமை ஆகியவற்றை பாதிக்கும் வகையிலும் செயல்படுவதாகக் கூறி 59 சீன செயலிகளுக்கு மத்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த திங்கள்கிழமை (ஜூன் 29) தடை விதித்து உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பேடிஎம் சீன நிறுவனம் என்றும், இதன் காரணமாக பேடிஎம் செயலியை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது குறித்து பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், "தேசிய நலன் கருதி எடுக்கப்பட்ட தைரியமான ஒரு முடிவு இது.
சுய சார்பு அமைப்பை நோக்கி நகரும் ஒரு படி. இதன்மூலம் சிறந்த இந்தியத் தொழில்முனைவோர் முன்வந்து இந்தியர்களால் இந்தியர்களுக்கு சிறந்தவற்றை உருவாக்க வேண்டிய நேரம் இது" என்று பதிவிட்டுள்ளார்.