டெல்லி: 11 இலக்க அலைபேசி எண்களை பரிந்துரைக்கவில்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, டிராய் விளக்கமளித்துள்ளது. ஆனால், தரைவழி தொலைபேசியிலிருந்து அழைக்கும்போது '0' என்ற எண்ணை சேர்க்கும்படி பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் தகவல் தொடர்பு பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியால் இணையத்தை அதிக அளவிலான மக்கள் பயன்படுத்துகின்றனர். இச்சூழலில் 11 இலக்க அலைபேசி எண்களை, அனைவருக்கும் வழங்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, டிராய் பரிந்துரை செய்திருந்ததாக பல்வேறு தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகின.
இதன் மூலம் இன்னும் அதிகமான மக்களுக்கு எண்கள் ஒதுக்க வசதியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இவ்வேளையில் அலைபேசி எண்களுக்கு தற்போது புழக்கத்தில் உள்ள 10 இலக்க எண்கள் முறையே தொடரும் என டிராய் விளக்கமளித்துள்ளது.