அமரப்பள்ளி என்ற தனியார் கட்டுமான நிறுவனம் தங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு வீடு கட்டித்தருவதாகக் கூறி ஏமாற்றிவிட்டது என்று பலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். கிரிக்கெட் வீரர் தோனியும், அமரப்பள்ளி நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருந்த நிலையில், நிதி மோசடி சர்ச்சை காரணமாக அதிலிருந்து விலகினார்.
மேலும், ‘நானும் வீடு கட்ட அந்த நிறுவனத்திடம் முதலீடு செய்துள்ளேன். எனக்கு வீட்டை பெற்றுத்தாருங்கள் அல்லது முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்க வழிசெய்யுங்கள்’ என உச்ச நீதிமன்றத்தை தோனி நாடியிருந்தார்.
இதையடுத்து, அமரப்பள்ளி நிறுவனத்தின் ஒப்பந்தங்களை ஆய்வு செய்வதற்காக இரண்டு தணிக்கையாளர்களைக் கொண்ட சிறப்புக் குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழு ஆய்வுசெய்து, தற்போது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
தணிக்கையாளர் குழுவின் அறிக்கையில், 'தோனியின் மனைவி ஷாக்ஷி, அமரப்பள்ளி குழுமத்தின் கீழ் இயங்கும் அமரப்பள்ளி மகி என்ற நிறுவனத்தின் இயக்குநராக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனமும் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டியின்போது ரிதி ஸ்போர்ட்ஸ் மற்றும் அமரப்பள்ளி மகி நிறுவனங்கள், சென்னை அணியின் ஸ்பான்சர்களாக இருந்த நிலையில், பல கோடி ரூபாய் நிதி கை மாறியது தொடர்பாக முறையான ஒப்பந்தங்கள் இல்லை.
அமரப்பள்ளி நிறுவனத்தில் முதலீடு செய்த வீட்டு உரிமையாளர்களின் பணம் சட்டவிரோதமாகவும் தவறாகவும் ரிதி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு திருப்பிவிடப்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம்' என்று தணிக்கையாளர் குழு அறிக்கை அளித்துள்ளது.
இதையடுத்து, தணிக்கையாளர்கள் குறிப்பிட்ட நிறுவனங்கள், வீட்டு உரிமையாளர்களின் பணத்தைத் திருப்பி அளிக்க அந்தந்த இயக்குநர்களுக்கு உத்தரவிடுகிறோம். பணத்தைத் திருப்பி அளிக்காவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.