ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சுமார் எட்டு ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித் தவித்துவருகிறது. இதன் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் தங்களது பதவியிலிருந்து விலகி விட்டனர். ஊழியர்களுக்கு மூன்று மாத காலமாக ஊதியம் வழங்காததால், இதன் விமானச் சேவையும் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது.
ஜெட் ஏர்வேஸை கையகப்படுத்துமா இந்துஜா குழுமம்!
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலீடு மேற்கொள்வது குறித்து ஆலோசித்துவருவதாக இந்துஜா குழுமம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீது இந்துஜா குழுமம் முதலீடு செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அக்குழுமம் நேற்று (மே 22) வெளியிட்ட அறிக்கையில், ‘ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து இந்துஜா குழுமம் முழு அளவில் மதிப்பீடு செய்துவருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனம், தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு திட்டங்கள், மின்சாரம், வீட்டுமனை, மருத்துவமனை, நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆர்வம்காட்டும் இந்துஜா குழுமம், தற்போது விமானத் துறையிலும் கால் பதிக்கும் வகையில் ஜெட் ஏர்வேஸில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை ஆராய்ந்துவருகிறது.