உலகளவில் பிரபலமான பேஸ்புக் நிறுவனம், புதிய வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், பேஸ்புக் நிறுவனம் புதிதாக பாடல் வீடியோக்களுக்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனம் சார்பில் பிரபல இசை கலைஞர்களின் பக்கங்களுக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், "ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு முன்னர், அனைவரும் புதிய செட்டிங்கை இயக்கிவிட்டால் தானாகவே அவர்களின் பாடல் வீடியோக்கள் புதிய சேவைக்கு மாற்றப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை பேஸ்புக் நிறுவனம் வெளியிடவில்லை. இந்தப் புதிய முயற்சியானது, கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூ-டியூப் நிறுவனத்துடன் போட்டி போடும் திட்டமாகத்தான் பார்க்கப்படுகிறது.
யூ-டியூப்பில் 2 பில்லியன் பயன்களுக்கு மேல் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் இசைத் துறைக்கு யூ-டியூப்பிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானமாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல், கூகுளின் யூ-டியூப்பில் விளம்பரமில்லா கட்டண சேவையில் 2 கோடி பயனர்கள் உள்ளனர். உலகளவில் பேஸ்புக் பயன்படுத்துவரின் எண்ணிக்கையும் 260 கோடியை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.