புதிய சைபர் பாதுகாப்புக் கொள்கையை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இன்று(ஆக.15) நாட்டின் 74 வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா எச்சரிக்கையாக இருப்பதாகவும், இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.
தேசிய சைபர் பாதுகாப்பு வியூகம் 2020இன்(National Cyber Security Strategy 2020) வரைவு, பாதுகாப்பான இணையத்தை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, இந்த ஆண்டு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, "சைபர் உலகில் வரும் அச்சுறுத்தல்கள் என்பது இந்தியர்களின் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்.
இதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது" என்றார். இந்திய பயனர்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க சமீபத்தில் பல சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் இருந்து இந்தியர்களின் தரவுகளை பாதுகாக்க இந்தியர்களின் தரவுகளை நாட்டின் எல்லைக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மத்திய அரசு "தேசிய சைபர் பாதுகாப்பு வியூகம் 2020"ஐ உருவாக்கியுள்ளது.
தேசிய சைபர் பாதுகாப்பு வியூகம் 2020, "அதிகரிக்கும் இந்த சைபர் தாக்குதல்கள் காரணமாக தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான தரவுகள் அந்நியர்களின் கைகளுக்குச் செல்ல வாய்ப்புள்ளது. தற்போதைய இணைய அச்சுறுத்தல் கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, IOT, 5ஜி போன்ற விரைவான தொழில்நுட்ப வளர்ச்சிகளால் சைபர் தாக்குதல்களை தடுப்பதில் சவால்கள் ஏற்படுகின்றன.
புதிய சவால்களில் தரவு பாதுகாப்பு / தனியுரிமை, வளர்ந்து வரும் சைபர்ஸ்பேஸில் சட்ட அமலாக்கம், வெளிநாடுகளில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை அணுகுவது, சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துதல், சைபர் கிரைம் மற்றும் சைபர் பயங்கரவாதம் ஆகியவற்றின் தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பு முக்கியமானவை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.