இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உடன்பாட்டில் அவ்வப்போது சிறு பூசல்கள் வந்தாலும், அவை விரைவாக களையப்பட்டு வர்த்தகம் எவ்வித சிக்கலுமின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 2019-20ஆம் ஆண்டு இந்தியாவுடன் அதிகளவில் வர்த்தகம் செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் தொடர்வதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 2019-20ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான இரு தரப்பு வர்த்தகம் 88.75 பில்லியன் டாலர்களாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற வர்த்தகம் என்பது 87.96 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
இந்தியாவுடன் வர்த்தக உபரி உள்ள வெகு சில நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக இடைவெளி என்பது 2018-19ஆம் ஆண்டில் 16.86 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து, 2019-20ஆம் ஆண்டு 17.42 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-19 ஆம் ஆண்டில், முதன்முதலில் சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளியாக மாறியது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் என்பது 2018-19ஆம் ஆண்டில் 87.8 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து, 2019-20ஆம் ஆண்டு 81.87 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது.